விவாகரத்து குறித்த சட்டங்கள் பற்றி ஓரளவேனும் நாம் அறிந்திருப்பதுகூட, திரைப்படங்கள் நமக்கு கற்பித்தவைதான். சட்டம் ஒரு அடிப்படை அறிவாக நம் மக்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
Published: 18 Jan 2019 8 PM Updated: 18 Jan 2019 8 PM எந்தெந்தக் காரணத்துக்காக விவாகரத்து. இந்தியச் சட்டம் சொல்வது என்ன? 0 Comments`உலகின் பல்வேறு நாடுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, இந்தியாவில் விவாகரத்து நடப்பது மிகக் குறைவு' என்கிறது சர்வதேச அறிக்கை. அதாவது, இந்தியத் திருமணங்களில் நூற்றுக்கு ஒன்று மட்டுமே தோல்வியடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம், இந்தியர்கள் திருமணத்தை மதத்தோடும் கலாசாரத்தோடும் தொடர்புபடுத்திப் போற்றுவதுதான்.
இந்திய விவாகரத்துச் சட்டங்களைப் பொறுத்தவரை, சமீப காலங்களில் முத்தலாக் தடை மற்றும் தொழுநோய் உள்ளவர்களை விவாகரத்து செய்யத் தடை என்று புதிய சட்டத் திருத்தங்களைப் புகுத்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆண்களோ பெண்களோ, அவர்கள் திருமண வாழ்வு கசக்கும்போது, அதிலிருந்து விடுபட்டு வெளிவர நினைப்பது தவறானதல்ல. ஆனால், எந்தெந்தக் காரணத்துக்காக விவாகரத்துப் பெறுவது சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது என்பதுகுறித்த விரிவான புரிதல் குறைவாக இருக்கிறது.
விவாகரத்துகுறித்த சட்டங்கள் பற்றி ஓரளவாவது நாம் அறிந்திருப்பதுகூட, திரைப்படங்கள் நமக்குக் கற்பித்தவைதான். சட்டத்தை, ஓர் அடிப்படை அறிவாக நம் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். அதை அறிந்துகொள்வதால், பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கும் என்ற அடிப்படையிலும், இந்தியாவில் விவாகரத்துகுறித்த சட்டம் என்ன சொல்கிறது எனவும், மூத்த வழக்குரைஞர் பெ.மணிமொழியிடம் பேசினோம்.
``இந்தியாவில் திருமண முறிவுக்கு என்னென்ன சட்டங்கள் இருக்கின்றன?''
``இந்தியாவில், திருமணங்கள் மட்டுமல்ல. திருமண முறிவும்கூட மத நம்பிக்கைகள் அடிப்படையில்தான் நிகழ்கின்றன. இதற்கான சட்டங்களும் மத அடிப்படையில் தனித்தனி சட்ட வரைவுகளாகத்தான் இருக்கின்றன. இந்து, புத்தம், சீக்கியம், ஜைன மதங்களைச் சார்ந்தவர்களின் திருமண முறிவு, இந்து திருமணச் சட்டம் 1955-ன்படியும், இஸ்லாமியர்களுக்கு, இஸ்லாமியத் திருமண முறிவுச் சட்டம் 1939-ன்படியும், கிறிஸ்தவர்களுக்கு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872 மற்றும் இந்திய விவாகரத்துச் சட்டம் 1869-ன் படியும், பார்சிகளுக்கு, பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் 1936-ன்படியும், கலப்பினத் திருமணங்கள் மற்றும் பதிவுத் திருமணங்கள் செய்பவர்களுக்கு சிறப்பு திருமணச் சட்டம் 1956-ன்படியும் திருமணச் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.''
``Mutual consent விவாகரத்து என்றால் என்ன?''
``திருமணத்துக்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் பிரிவதாக மனப்பூர்வமாக முடிவெடுக்கும்பட்சத்தில், இந்த mutual consent (consent divorce) முறையில் விவாகரத்து பெறுவது. இதற்கு, குறைந்தது ஒரு வருடமாவது கணவன்-மனைவி இருவரும் பிரிந்து இருக்கவேண்டியது சட்டப்படி அவசியம். கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும், அவர்களுக்குள் திருமண பந்தம் இல்லாமல், அவர்கள் தனியாக ஒரு வருடம் பிரிந்து இருப்பின், இந்த mutual consent முறையில் விவாகரத்து பெற முடியும்.
புதிதாகத் திருமணமானவர்கள், இந்த முறையில் திருமணத்தை ரத்துசெய்வதற்கு, திருமணமாகிக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகியிருக்க வேண்டும். அதேசமயம், திருமணம் ஆன நாள் முதலே அவர்கள் பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும்.
இந்த mutual consent பிரிவின் பிறகு, ஜீவனாம்சம் எவ்வளவு தர வேண்டும்? குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கு யார் எவ்வளவு பொறுப்பு எடுத்துக்கொள்வது? சொத்தை எப்படிப் பிரித்துக்கொள்வது ஆகிய மூன்று கேள்விகளுக்கும் தெளிவாக விடை தேடிக்கொள்வது அவசியம்.''
``வேறு எந்தெந்தக் காரணத்துக்காக விவாகரத்து பெறுவதை சட்டம் அனுமதிக்கிறது?''
``கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருக்கிறது. இதன் அடிப்படையில், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்படுகின்றன.
1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.
2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவுமுறை.
3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக்கொண்டு விவாகரத்து கோரலாம். (கிறிஸ்தவர்கள், இந்தக் காரணத்துக்காக மட்டும் விவாகரத்து பெற முடியாது.)
4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.
6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)
7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.
8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.
9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.
10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.
11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.
12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.
13. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.''
``சமீபத்தில் விவாகரத்து குறித்து வந்த சட்டத் திருத்த மசோதாக்கள் என்னென்ன?''
``தற்போதைய அரசு, இஸ்லாம் திருமணச் சட்ட வரைவு திருத்தத்துக்காக முத்தலாக் மசோதாவைக் கொண்டுவந்திருக்கிறது. இதுவரை இஸ்லாமியத் திருமண முறிவுச் சட்டம், இஸ்லாமிய ஆண்களுக்கே மிக அதிகமான உரிமைகளைக் கொடுக்கிறது. அதன்படி, ஓர் இஸ்லாமிய ஆண், தன் மனைவியை விவாகரத்து செய்ய எல்லையற்ற உரிமைகளைச் சட்டம் வழங்குகிறது.
மனைவிக்கு காரணத்தைத் தெரிவிக்காமலேயே `தலாக்' எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆணுக்கு இந்தச் சட்டம் உரிமை வழங்குகிறது. மேலும், மனைவிக்குத் தெரிவிக்காமல்கூட தலாக்கைச் செயல்படுத்தும் உரிமை, இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை. புதிய சட்ட வரைவு, முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வதை செல்லாது என அறிவித்தது மட்டுமின்றி, அப்படி முத்தலாக் சொல்லும் கணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை எனவும் இந்த சட்டத் திருத்தும் சொல்கிறது.
மேலும், தொழுநோய் இப்போது குணப்படுத்தக்கூடிய நோயாக இருப்பதாலும், அந்த நோயைக் காரணம்காட்டி விவாகரத்து பெறுவது மனிதநேயமற்ற செயல் எனவும் எழுந்த கருத்துகளுக்கு செவிசாய்த்திருக்கிறது மத்திய அரசு. அதன்படி, தொழுநோயை இனி விவாகரத்து பெறுவதற்கான காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என நாடாளுமன்றக் கீழவையில் சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆணோ பெண்ணோ, நிரந்தரமாக ஒரு திருமண வாழ்வு மகிழ்ச்சியளிக்கக்கூடியதல்ல என அறிந்த பிறகும், அந்தத் திருமண உறவில் தொடர்வது என்பது அவசியமற்றது. ஒரு பெண், தன்மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளைத் தாங்கிக்கொள்வதும், ஒரு ஆண் தனக்கு இழைக்கப்படும் அநீதியைப் பொறுத்துக்கொள்வதும், அவசியமின்றி அவரவர் நலனுக்காகப் பிரிவது என முடிவுசெய்யும்பட்சத்தில், அதற்கு நியாயமான வரையறைகளுடன் சட்டம் உறுதுணையாயிருக்கிறது.
அதேசமயம், வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரத்தில், பலரது வாழ்வைப் பாதிக்கக்கூடிய, மாற்றியமைக்கக்கூடிய விவாகரத்து போன்ற முடிவுகளை எடுக்கும்போது, சம்பந்தப்பட்டவர்கள் உணர்ச்சிவயப்பட்டு இத்தகைய முடிவுகளை எடுக்காமல், ஆழ்ந்து யோசித்து எடுப்பதும் அவரவரது கடமை.